Tuesday, January 20, 2009

10. உயில்

முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தார் ஒளரங்கசீப். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் (1657 - 1707).

வயது தொண்ணூறு. இத்தனை வருடங்கள் போர் போர் என்று ஓடிவிட்டது. இந்தியா முழுவதும் கட்டியாள வேண்டும் என்ற பெருங்கனவில் பெரும் பகுதி நிறைவேறிவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி. சில வருடங்களில் அவற்றையும் பிடித்துவிடலாம்.

என்ன செய்ய? முதுமை ஆட்கொண்டுவிட்டது. உடல் ஒத்துழைக்கவில்லை. மரணத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

தனக்குப்பின் தன் வாரிசுகள், இந்தப் பேரரசைகட்டிக்காப்பார்களா? பாபர் காலத்தில் ஆரம்பித்த போர்கள், ஆக்கிரமிப்புகள். கிட்டத்தட்ட நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று எவ்வளவே பரந்து விரிந்திருக்கிறது. நிலைக்குமா? கவலை, அவரது சுருங்கிய கன்னங்களில் சுடத் தெரிந்தது.

தான் மாட்டிக் கொண்டது போல, தனக்குச் சகோதரர்களுடன் நேர்ந்தது போல வாரிசுரிமைப் போர், தன் மகன்களுக்கு இடையேயும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தார். ஆட்சிப் பகுதிகளைப் பரித்துக் கொடுத்து உயில் எழுதி வைத்தார்.

'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச்சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்றுச் சேர்த்த பணத்தில் கொஞ்சம் அஜ்யா பேக்கிடம் இருக்கிறது. அந்தப் பணத்தை கொண்டு என் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

தன்னைக் காண வந்த மகன் பகதூர் ஷாவிடம் மனம் விட்டுப் பேசினார்.

'நான் உலகத்துக்குத் தனியாக வந்தேன். இந்த உலகத்தை விட்டு வேற்று மனிதனாகப் போகப்போகின்றேன். நான் யார் என்று என்னால் இதுவரை உணர முடியவில்லை. இங்கு வந்து என்ன செய்தேன் என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நிறையப் பாவங்களை செய்துள்ளேன். எனக்காக என்னென்ன தண்டனைகள் காத்திருக்கின்றன என்று தெரியவில்லை.'

1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

ஒளரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப் பெரிய பேரரசை கவனிக்க அவருக்குத் திறமையில்லை. ஒளரங்கசீப் காலத்திலேயே, கொஞ்சகொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர்.

ஒளரங்கசீப் மறைந்த நூறாண்டுகளுக்குள்ளாகவே முகலாயப் பேரரசு முகவரியின்றிப் போனது. இருந்த கொஞ்சநஞ்ச முகலாய ஆட்சியாளாகளும் மராட்டியர்களின் கைப்பொம்மையாக இருந்தனர்.
அப்போது இந்தியாவில் தன் முத்திரையைப் பதிக்க பலமாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தது பிரிட்டனில் இருந்து வந்த கிழக்கிந்திய கம்பெனி.

9. ஒளரங்கசீப் எப்படிப்பட்டவர்?

முகலாய முதல் பேரரசர் பாபர், சிறந்த பாடகர். ஹூமாயூன் என்ற ஒரு சிறைக்கைதியின் குரல் வளத்தால் ஈர்க்கப்பட்டு, அவரையே தன் அரசவைப் பாடகராக்கிக் கொண்டார்.

அக்பருக்கு இசையில் ஆர்வம் மிக அதிகம். அவரது அவையிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட சிறந்த இசைக்கலைஞர்கள் இருந்தனர். அதில் தான்சேன் குறிப்பிடத்தக்கவர்.

ஷாஜஹான் மிகவும் இனிமையாகப் பாடக்கூடியவர். சரி, ஒளரங்கசீப்?

முதலில் ஒளரங்கசீப் அவையிலும் இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் இருந்தனர். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பதினோராவது ஆண்டிலிருந்து அவற்றுக்குத் தடைவிதித்தார். இஸ்லாம் மத நெறிகளின் படி இசை, ஆடல், நடனம் போன்ற சிற்றின்பங்கள் கூடாது. ஒளரங்கசீப்பும் அதைத்தான் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.

அவரது அவையில் இசைக்கலைஞர்களோ, நடனக் கலைஞர்களோ இடம் பெறவில்லை. முந்தைய காலத்தில் அவையில் இடம் பெற்றிருந்த கலைஞர்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கி உதவினார்.

முகலாயப் பேரரசின் கீழ்வரும் எந்த மன்னரும், பிரபுக்களும் இது போன்ற கேளிக்கைளில் ஈடுபடக் கூடாது என்று கட்டளை போட்டவர் ஒளரங்கசீப்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் உண்டு. ஒளரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவர்.

ஒளரங்கசீப் தன் வாழ்வில் பாதிக்கும் மேல் போர்களங்களிலேயே கழித்திருக்கிறார். ஆனால், எப்பேர்பட்ட போர்களத்தில் இருந்த போதும் தொழுகை வேளையில் அதை செய்யத் தவறியதில்லை. போர் நடக்கும் இடத்திலேயே, ஒரு ஓரமாக தன் தொழுகையை முடித்துவிட்டு, பின் தாக்குதலைத் தொடர்வார்.

மற்றபடி, அரண்மனையில் அவர் இருக்கும் நாள்களிலும் தொழுகைக்கான நேரங்களை பொருத்து மற்ற வேளைகளை அமைத்துக் கொண்டார். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் ஒளரங்கசீப், முதல் தொழுகையான ஃபஜரை முடிப்பார். பின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களை வாசிப்பார்.

ஏழு மணிக்குப்பின் காலை உணவை முடிப்பார். ஏழரைக்குள் அரசவைக்கு வந்துவிடுவார். வழக்குகளை விசாரிப்பார். உண்மைகளை ஆராய்வார். அதற்குப் பின் குர்ஆனின் படி தீர்ப்புகளை வழங்குவார்.

எட்டரை மணிக்கு மேல் அரண்மனை மாடத்தில் வந்து நிற்பார். அங்கிருந்து நோக்கினால் எமுனை நதியின் அழகை ரசிக்கலாம். ஒளரங்கசீப்பை பார்ப்பதற்காக நதியின் கரையில் மக்கள் திரண்டு நிற்ப்பர்.

(அரண்மனை மாடத்திலிருந்து அரசர்கள் மக்களுக்குக் காட்சித்தருவதென்பது ஒரு வழக்கம் ஆனால் இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்பதால், அந்த வழக்கத்தை நிறுத்திக்கொண்டார் ஒளரங்கசீப்).

அதற்குப்பின் வீரர்களின் போர்ப் பயிற்சியை பார்வையிடுவார். யானைச் சண்டையைப் பார்த்து ரசிப்பார். இந்த நேரத்தில் ஒவ்வொரு வெள்ளியன்றும் டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

காலை ஒன்பது மணியிலிருந்து, பதினோரு மணி வரை அரசவை சிம்மாசனத்தில் அமர்ந்து மக்கள் பணிகளை கவனிப்பார். அதற்குப்பின் தனிப்பட்ட விருந்தினர்களையும், பிற ஆட்சியாளர்களையும், வெளி மன்னர்களையும் சந்திப்பதற்கு நேரம் கொடுத்திருப்பார்.

ஒளரங்கசீப்புக்கு ஒவ்வொரு மாகாணத்தின் அதிகாரிகளிடமிருந்து வரும் கடிதங்கள் செய்தி வாசித்துக் காண்பிக்கப்படும்.அவற்றுக்கான பதில்களை ஒளரங்கசீப் அளிப்பார். உடனுக்குடன் கடிதம் எழுதப்படும். சிலக் குறிப்பிட்ட கடிதங்களுக்கு மட்டும் ஒளரங்கசீப்பே தன் கைப்பட பதில் எழுதுவார்.

பனிரெண்டு மணிக்கு மதிய உணவு சாப்பிடுவார். பின் ஓய்வு.

மதியம் இரண்டு மணி என்பது லுஹர் தொழுகைக்கான நேரம்.

இரண்டரை மணிக்கு மீண்டும் அரசாங்கப்பணிகளைச் செய்வார். முடித்த பின் அஸர் தொழுகை.

ஐந்தரை மணிக்கு விருந்தினர்களின் மாஜயாதையை ஏற்றுக் கொள்வார். பின் மக்ரிப் தொழுகை. அந்தத் தொழுகை முடிந்ததும் திவானி-இ-காஸ் அவைக்குச் செல்வார். அங்கு சிறிது நேரம் பணியாற்றுவார்.

ஏழரை மணிக்குச் சபையைக் கலைப்பார். இஷா தொழுகையை மேற்கொள்வார்.

எட்டு மணிக்குச் இரவு உணவு. பின் இஸ்லாம் மார்க்க தியானத்தில் ஈடுபடுவார். புத்தகங்களை வாசிப்பார். பின்பு றங்கச் செல்வார்.

இவை தான் ஒளரங்கசீப்பின் அன்றாட நடவடிக்கைகள். இவை சில நாள்கள் மட்டும் அவசர காரியத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக வெள்ளிக்கிழமையன்று நீதி வசாரணை கிடையாது.

ஒளரங்கசீப், இருபத்து நான்கு மணிநேரத்தில் மூன்று மணி நேரமே உறங்கினார். வேலை தவிர மீதமிருந்த ஓய்வு நேரங்களில் எல்லாம் இஸ்லாமிய மார்க்க நூல்களைப் படிப்பதில் செலவிட்டார். தரையில் தான் படுப்பார். ஒளரங்கசீப் மாமிசம் உண்ணாதவர். கொரின்தா என்ற புளிப்புச் சுவை நிறைந்த பழத்தை விரும்பிச் சாப்பிடுவார்.

அரசாங்க கஜானா பணமானது மக்களுக்கே உரியது, அரசு குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில் ஒளரங்கசீப் மிகவும் உறுதியாக இருந்தார். தன் சொந்தச் செலவுகளுக்கா ஒரு போதும் அவர் கஜானாவை உபயோகிக்க மாட்டார்.

பொதுவாக மன்னர்கள் தன் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்குக் காட்சி கொடுப்பதைப் பாரம்பர்யமாக வைத்திருந்தார்கள். ஆனால் எளிமை விரும்பியான ஒளரங்கசீப், தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும் சாதாரண தினமாகவே எடுத்துக் கொண்டார்.

ஒளரங்கசீப்புக்குக் குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்ஆனை தன் கைப்பட எழுதுவதில் அதீத விருப்பம் இருந்தது. அந்த இரண்டையும் விற்றுக் கிடைக்கும் பணத்தில் தன் தனிப்பட்ட செலவுகளைப் பார்த்துக் கொண்டார்.

மதுவை வெறுத்தவர். தன் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுவைத் தடை செய்தார். அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார். உல்லாச நிகழச்சிகள் நடத்தக் கூடாதென்று உத்தரவிட்டார். போதைப் பொருள்களையும் ஒழித்தார்.

இறந்த கணவனின் சடலத்தை வைத்து எரிக்கும்போதே, அதே நெருப்பில் மனைவியும் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் ஹிந்துக்களிடையே அதிகமாக இருந்தது. இது உடன்கட்டை அல்லது சதி என்றழைக்கப்பட்டது.

ஒருமுறை போர்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவனது மனைவியை அந்த நெருப்பில் குதிக்கச் சொல்லி சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒளரங்கசீப் அங்கு வந்தார். அந்த செயலைத் தடுத்தார். அங்கிருந்தவர்கள், தங்கள் மத விஷயத்தில் தலையிடக் கூடாதென்று வாதம் செய்தனர்.

ஆனால் ஒளரங்கசீப் விடவில்லை. 'இது அநயாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக் கூடாது. இந்தச் சம்பிரதாயத்தைத் தடை செய்கிறேன்' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காகப் பல்வேறு பிரிவினர்களிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்தச் சட்டத்தை செயல்படுத்த முடிந்தது.

நௌரோஸ் (Navroz) என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமையமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்தத்திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்குச் சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.
வீணாக அரசாங்கப்பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத ஒளரங்கசீப் நௌரோஸ் பண்டிகையை தடைச் செய்தார்.

8. ஆட்சி எப்படிப்பட்டது?

'ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு'.

ஒளரங்கசீப்பின் லட்சியமாக இருந்தது இதுதான். இந்தியா முழுவதும் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும். இஸ்லாமியச் சட்டப்படி (ஷரீயத்) ஆட்சி நடத்த வேண்டும் என்பதே ஒளரங்கசீப்பின் எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காககத் தான் போராடிக்கொண்டிருந்தார்.

தன் லட்சியத்தை நிறைவேற்ற ஒளரங்கசீப் பிற மதத்தினர்களைக் கொடுமைப்படுத்தினார். ஹிந்துக்கள் மீது அதிக வரிகளை விதித்தார், அவர் ஆட்சியில் இஸ்லாமியர்களைத் தவிர மற்ற மதத்தினர் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர், அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவருடைய ஆட்சியில் தான் ஏராளமான ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இவையெல்லாம் ஒளரங்கசீப் ஆட்சிக் காலம் பற்றிப் பொதுவாகக் கூறப்படும் செய்திகள்.

ஒளரங்கசீப் ஆட்சியில் சில புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும், நடைமுறையில் இருந்த சில வரிகள் நீக்கப்பட்டன என்பதே உண்மை.

ஹிந்துக்கள் தீபாவளியின் போது வீடுகளில், வீதிகளில், கோயில்களில் வரிசையாக விளக்குகளை ஏற்றுவர். அதே போல, முஹர்ரம் பண்டிகையின் போது தீபங்கள் ஏற்றுவது முஸ்லீம்களின் வழக்கமாக இருந்து வந்தது. இந்த தீப அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்றால், தனியாக வரி செலுத்த வேண்டியிருந்தது. ஒளரங்கசீப் அதை ரத்துசெய்தார்.

கங்கை என்பது, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் நதி. அதில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. ஆனால் முகலாயர்கள் ஆட்சியில், கங்கை நதியில் ஹிந்துக்கள் நீராட வரி செலுத்த வேண்டியதிருந்தது. ஒளரங்கசீப் அந்த வரி தேவையில்லை, யார் வேண்டுமானாலும் கங்கையில் நீராடலாம் என்று அறிவித்தார்.

இற்ந்தவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதென்பது ஹிந்துக்களின் சடங்குகளில் ஒன்று. அதற்கும் தனியாக வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த வரியும் ஒளரங்கசீப் காலத்தில் நீக்கப்பட்டது.

நதிகளில் மீன்கள் பிடிப்பதற்குக்கூட வரி இருந்தது. பால் கறந்து விற்பதற்கும் வரி, பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரி, காய்கறிகள் விற்பதற்கும் வரி எல்லாமே ஒளரங்கசீப் காலத்தில் நீக்கப்பட்டன.

மாட்டின் சாணத்தைத் தட்டி, காய வைத்தால் அது வரட்டியாகிவிடும். அதை அடுப்பெரிப்பதற்கும், இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்படுத்தி வந்தன். ஆனால் அந்த வரட்டியை உபயோகிப்பதற்குக் கூட தனியாக வரிவிதிக்கப்பட்டிருந்தது. அதுவும் நீக்கப்பட்டது.

இவைப் போக ஒடுக்கப்பட்ட ஹிந்து விதவைப் பெண்களை மறுமணம் செ;துக் கொள்பவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது. அதை மாற்றினார் ஒளரங்கசீப். ஹிந்து பண்டிகைகளின் போதும், கோயில் திருவிழாக்களின் போதும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சந்தைகள் போடுவது வழக்கம். அதற்கு வியாபாரிகள் செலுத்த வேண்டிய வரி, ரத்து செய்யப்பட்டது.

இஸ்லாமியப் பேரரசின் கீழ் வாழும் இஸ்லாமியர் அல்லாத மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி, ஜிஸ்யா (Jizya). அதாவது தங்கள் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர் அல்லாத மக்கள் ஜிஸ்யா வரியை செலுத்திவந்தனர். அக்பர் தவிர பிற முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்த ஜிஸ்யா வரி வழக்கத்தில் இருந்தது. அரசின் பாதுகாப்புச் செலவுக்காக வாங்கப்பட்ட இந்த வரியிலிருந்து, முதியோர், பிச்சைக்காரரர்கள், ஊனமுற்றோர், துறவிகள், கிருஸ்தவ குருமார்கள, அந்தணர்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 1679-ல் ஒளரங்கசீப் தன் தன் பேரரசு முழுவதும் ஜிஸ்யா வரியினை கொண்டுவந்தார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய பிற மதத்தினர்களுக்கு இந்த வரி விதிக்கப்படவில்லை.

வரியைத் தவணை முறையில் செலுத்த மக்கள் அனுமதிக்ப்பட்டனர். பணமாக அன்றி, பொருளாகக் கூட செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. மிகவும் கஷ்டத்தில் இருப்பவருக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் இஸ்லாமியர்கள் ராணுவத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர். 'ராணுவத்தில் சேராமல் வரிகட்டிக்கொள்கிறேன்' என்று கேட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பொதுநிர்வாகம், ராணுவத்தில் பதவிகள் ரேங்க் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. மன்ஸப்தாரி முறை என்று அழைக்கப்பட்ட இது பழைய டெல்லி சுல்தான்களும் மங்கோலியர்களும் பின்பற்றி வந்ததாகும். ரேங்க் என்பது 10 முதல் 5000 வரை இருந்தது. 10 என்பது மிகவும் சாதாரண நிலை. 5000 மிகவும் உயரிய பதவிக்குரிய ரேங்க். இந்த ரேங்க் பட்டியலில் வருபவர்கள் மன்ஸப்தார்ஸ் என்று அழைக்கப்பட்டனர். பாபர், அக்பர் காலத்தில் இருந்தே இந்த மனஸப்தாரி முறை கடைபிடிக்கப்பட்டது.

எந்த ரேங்க் கொண்டவரும் நேரடியாக மன்னரின் கீழ் பணியாற்றுபவர்களாகத்தான் அர்த்தம். 5000 ரேங்க் கொண்ட ஒரு மன்ஸப்தார், 1000 ரேங்க கொண்ட இன்னொரு மன்ஸப்தாரை அதிகாரம் செய்ய முடியாது.

இந்த மனஸப்தாரி முறையில் அக்பர் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தார். முக்கியமாக, ரேங்க் 5000 என்பதை 7000 வரை உயர்த்தினார். ஒளரங்கசீப்பும் அதைக் கடைபிடித்தார். ஒளரங்கசீப் நியமித்தவர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஹிந்து மன்ஸப்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகவும் அதிகமான பகுதிகளை ஆண்ட ஒரே முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் தான். அவர் காலத்தில் தெற்கே தமிழகத்தின் செஞ்சியிலிருந்து* வடக்கே காஷ்மீர் வரையலும் மேற்கே ஆஃப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் முகலாயர்கள் வசம் இருந்தது. கொவா மட்டும் போர்த்துகீசியர்களிடம் இருந்தது.
------------------------------------------------------------------------------------------
* தெற்கே தக்காணபபகுதிகளை எல்லாம் தாண்டி, தமிழகத்துக்குள்ளும் முகலாயப்பேரரசு வேர்விட்டது. சுல்பிகார் கான் என்பவர் ஒளரங்கசீப்பின் தளபதிகளுள் முக்கியமானவர் தக்காணப் போர்கள் பலவற்றில் வெற்றிகரமாக செயல்பட்டவர்.
------------------------------------------------------------------------------------------
அவர் முகலாயப்படைகளோடு தெற்கு நோக்கி மேலும் மேலும் முன்னேறினார். 1690-ல் செஞ்சிக்கு வந்தார். கோட்டை முற்றுகையிடப்பட்டது. 1698-ல் செஞ்சிக் கோட்டை முகலாயர்கள் வசமானது. அதன் பெயர் நஸரஜ்கட்டா என்று பெயர் மாற்றிவைக்கப்பட்டது.

அதற்குப்பின் ரஜபுத்திர தளபதியான 'சொரூப்சிங்', செஞ்சியின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அத்தனை பெரிய பேரரசரை ஒற்றையாளாக நிர்வகிப்பதென்பது எவ்வளவு பெரிய காரியம். டெல்லியிலோ, ஆக்ராவிலோ இருந்துக்கொண்டே செயல்படுவது சரிபடாது என்று உணர்ந்த ஒளரங்கசீப், பெரும்பாலும் தக்காணப்பகுதிகளில் தன் இருப்பை அமைத்துக்கொண்டார். அதனால் அவர் காலம் வரையிலும் நிர்வாகத்தில் பெரும் குளறுபடிகள் எல்லாம் உண்டாகவில்லை.

பல சமயங்களில் அவரது மகன்களே, ஒளரங்கசிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கோல்கொண்டா அரசரோடு நேர்ந்து சதி நடவiடிக்கைகளில் ஈடுபட்ட தன் மகனைப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தவர் ஒளரங்கசிப். பிற மகன்களும் அவ்வப்போது, இம்மாதிரி தண்டனைகளை அனுபவித்திருக்கின்றனர்.

பாபர் காலத்தில் ஆரம்பித்த போர்கள். முகலாயர்களின் எல்லையை விரிவாக்க எத்தனை உயிர்ப் பலிகள். கிட்டதட்ட இந்தியாவே தன் கையில் என்ற நிலையில் அதனைக் கட்டிக் காக்க வேண்டாமா? எவ்வளவு பெரியபொறுப்பு அது. அதனால் தான் நிhவாகத்தில் கடுமையாகவே நடந்துக் கொண்டார் ஒளரங்கசீப்.

பேரரசின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று ஹிந்து கோயில்கள் சம்பந்தப்பட்டது.

'முகலாயப்பேரரசின் ஆளுகைக்குள்பட்ட புராதானக் கோயில்கள் எவற்றையும் அழிக்கக்கூடாது. அதே சமயத்தில் புதிய கோயில்கள் எதையும் இனி கட்டவும் அனுமதி கிடையாது.'

இது தான் ஒளரங்கசீப் போட்ட உத்தரவு தவிர, ஏற்கெனவே இருந்த கோயில்களை இடிக்கச் சொல்லி அவர் கட்டளையிட்டது கிடையாது. ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமை ஒளரங்கசீப் காலத்தில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.

சை சமயத்தை பரப்பியவர்களில் குமரகுருபரர் முக்கியமானவர். அவர் ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர் தான் (1625 - 1688). வட இந்தியாவில் சைவ சமயத்தை பரப்பியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு.

குமர குருபரர், காசியில் சைவ மடாலயலங்களை அமைப்பதற்காக, ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதே போல, பலவேறு கோயில்களுக்கு மானியங்கள் வழங்கியதற்கான குறிப்புகளும் இருக்கின்றன.

காசியில் விஸ்வநாதர் கோயிலை ஒளரங்கசிப் இடிக்கச்சொல்லி உத்திரவிட்டார். அக்கோயில் இடிக்கப்பட்டது. அதற்கு காரணமாக கூறப்படும் சம்பவம் இதுதான். ஒரு ஹிந்து ராஜாவின் ராணிகள், காசியில் குளிக்க வந்தனர். அந்த ராணிகளுள் ஒருவர், கோயிலில் வைத்து அவமானப்படுத்தப்பட்டார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக மற்ற ஹிந்து ராஜாக்கள் முறையிட்டனர். விஸ்வநாத விக்கிரகம் அங்கிருந்து அகற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

கோயில் மட்டுமல்ல, கோல்கொண்டாவில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதாகவும் கூறுவார்கள். கோல்கொண்டா மன்னன், தானஷா, பல ஆண்டுகள் வரியெதுவும் கட்டாமல், அந்த பணத்தை புதைத்து மசூதி ஒன்றைக் கட்டிவிட்டான். கோபமடைந்த ஒளரங்கசீப், மசூதியை இடிக்கச்சொன்னார். பணம் மீட்கப்பட்டது.

மற்றபடி ஒளரங்கசீப் ஆட்சியில் கட்டாய மத மாற்றங்கள் இருந்ததாகக் கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை. தன்னிடம் சரணடைந்த சிற்றரசர்களை மதம் மாறச் சொல்லியெல்லாம் கட்டாயப்படுத்தவும் இல்லை.

ஆடம்பரத்தை விரும்பாத மனிதர் அவர். ஒரு பேரரசராக இருந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவந்தவர். அவ்வளவு செலவு செய்து தன் தந்தை, தாய்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர்., இன்னொரு கருஞ்சலவைக் கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளைத் தடுத்தவர். இருந்தாலும் ஒளரங்கசீப் சில முக்கியமான சின்னங்களை கட்டினார்.

லாஹூரில் பாட்ஷாய் மஸ்ஜித் (Bhadshai Masjidh) என்ற மிகப் பெரிய மசூதியைக் கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டுத்தளத்தை கொண்டது இந்த மசூதி.

டெல்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் (Moti Masjidh) என்ற சிறிய மஸ்ஜித் ஒன்றையும் கட்டினார்.

லாஹூர் கோட்டையைச் சுற்றியிருக்கும் பதிமூன்று நுழைவாயில்களில் ஒன்றான 'ஆலம் கீர்' என்ற பிரமாண்டமான கட்டடம் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.
எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான் ஒளரங்கசீப்பால் முகலாயப்பேரரசை கட்டிக்காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.