Tuesday, January 20, 2009

9. ஒளரங்கசீப் எப்படிப்பட்டவர்?

முகலாய முதல் பேரரசர் பாபர், சிறந்த பாடகர். ஹூமாயூன் என்ற ஒரு சிறைக்கைதியின் குரல் வளத்தால் ஈர்க்கப்பட்டு, அவரையே தன் அரசவைப் பாடகராக்கிக் கொண்டார்.

அக்பருக்கு இசையில் ஆர்வம் மிக அதிகம். அவரது அவையிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட சிறந்த இசைக்கலைஞர்கள் இருந்தனர். அதில் தான்சேன் குறிப்பிடத்தக்கவர்.

ஷாஜஹான் மிகவும் இனிமையாகப் பாடக்கூடியவர். சரி, ஒளரங்கசீப்?

முதலில் ஒளரங்கசீப் அவையிலும் இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் இருந்தனர். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பதினோராவது ஆண்டிலிருந்து அவற்றுக்குத் தடைவிதித்தார். இஸ்லாம் மத நெறிகளின் படி இசை, ஆடல், நடனம் போன்ற சிற்றின்பங்கள் கூடாது. ஒளரங்கசீப்பும் அதைத்தான் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.

அவரது அவையில் இசைக்கலைஞர்களோ, நடனக் கலைஞர்களோ இடம் பெறவில்லை. முந்தைய காலத்தில் அவையில் இடம் பெற்றிருந்த கலைஞர்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கி உதவினார்.

முகலாயப் பேரரசின் கீழ்வரும் எந்த மன்னரும், பிரபுக்களும் இது போன்ற கேளிக்கைளில் ஈடுபடக் கூடாது என்று கட்டளை போட்டவர் ஒளரங்கசீப்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் உண்டு. ஒளரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவர்.

ஒளரங்கசீப் தன் வாழ்வில் பாதிக்கும் மேல் போர்களங்களிலேயே கழித்திருக்கிறார். ஆனால், எப்பேர்பட்ட போர்களத்தில் இருந்த போதும் தொழுகை வேளையில் அதை செய்யத் தவறியதில்லை. போர் நடக்கும் இடத்திலேயே, ஒரு ஓரமாக தன் தொழுகையை முடித்துவிட்டு, பின் தாக்குதலைத் தொடர்வார்.

மற்றபடி, அரண்மனையில் அவர் இருக்கும் நாள்களிலும் தொழுகைக்கான நேரங்களை பொருத்து மற்ற வேளைகளை அமைத்துக் கொண்டார். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் ஒளரங்கசீப், முதல் தொழுகையான ஃபஜரை முடிப்பார். பின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களை வாசிப்பார்.

ஏழு மணிக்குப்பின் காலை உணவை முடிப்பார். ஏழரைக்குள் அரசவைக்கு வந்துவிடுவார். வழக்குகளை விசாரிப்பார். உண்மைகளை ஆராய்வார். அதற்குப் பின் குர்ஆனின் படி தீர்ப்புகளை வழங்குவார்.

எட்டரை மணிக்கு மேல் அரண்மனை மாடத்தில் வந்து நிற்பார். அங்கிருந்து நோக்கினால் எமுனை நதியின் அழகை ரசிக்கலாம். ஒளரங்கசீப்பை பார்ப்பதற்காக நதியின் கரையில் மக்கள் திரண்டு நிற்ப்பர்.

(அரண்மனை மாடத்திலிருந்து அரசர்கள் மக்களுக்குக் காட்சித்தருவதென்பது ஒரு வழக்கம் ஆனால் இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்பதால், அந்த வழக்கத்தை நிறுத்திக்கொண்டார் ஒளரங்கசீப்).

அதற்குப்பின் வீரர்களின் போர்ப் பயிற்சியை பார்வையிடுவார். யானைச் சண்டையைப் பார்த்து ரசிப்பார். இந்த நேரத்தில் ஒவ்வொரு வெள்ளியன்றும் டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

காலை ஒன்பது மணியிலிருந்து, பதினோரு மணி வரை அரசவை சிம்மாசனத்தில் அமர்ந்து மக்கள் பணிகளை கவனிப்பார். அதற்குப்பின் தனிப்பட்ட விருந்தினர்களையும், பிற ஆட்சியாளர்களையும், வெளி மன்னர்களையும் சந்திப்பதற்கு நேரம் கொடுத்திருப்பார்.

ஒளரங்கசீப்புக்கு ஒவ்வொரு மாகாணத்தின் அதிகாரிகளிடமிருந்து வரும் கடிதங்கள் செய்தி வாசித்துக் காண்பிக்கப்படும்.அவற்றுக்கான பதில்களை ஒளரங்கசீப் அளிப்பார். உடனுக்குடன் கடிதம் எழுதப்படும். சிலக் குறிப்பிட்ட கடிதங்களுக்கு மட்டும் ஒளரங்கசீப்பே தன் கைப்பட பதில் எழுதுவார்.

பனிரெண்டு மணிக்கு மதிய உணவு சாப்பிடுவார். பின் ஓய்வு.

மதியம் இரண்டு மணி என்பது லுஹர் தொழுகைக்கான நேரம்.

இரண்டரை மணிக்கு மீண்டும் அரசாங்கப்பணிகளைச் செய்வார். முடித்த பின் அஸர் தொழுகை.

ஐந்தரை மணிக்கு விருந்தினர்களின் மாஜயாதையை ஏற்றுக் கொள்வார். பின் மக்ரிப் தொழுகை. அந்தத் தொழுகை முடிந்ததும் திவானி-இ-காஸ் அவைக்குச் செல்வார். அங்கு சிறிது நேரம் பணியாற்றுவார்.

ஏழரை மணிக்குச் சபையைக் கலைப்பார். இஷா தொழுகையை மேற்கொள்வார்.

எட்டு மணிக்குச் இரவு உணவு. பின் இஸ்லாம் மார்க்க தியானத்தில் ஈடுபடுவார். புத்தகங்களை வாசிப்பார். பின்பு றங்கச் செல்வார்.

இவை தான் ஒளரங்கசீப்பின் அன்றாட நடவடிக்கைகள். இவை சில நாள்கள் மட்டும் அவசர காரியத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக வெள்ளிக்கிழமையன்று நீதி வசாரணை கிடையாது.

ஒளரங்கசீப், இருபத்து நான்கு மணிநேரத்தில் மூன்று மணி நேரமே உறங்கினார். வேலை தவிர மீதமிருந்த ஓய்வு நேரங்களில் எல்லாம் இஸ்லாமிய மார்க்க நூல்களைப் படிப்பதில் செலவிட்டார். தரையில் தான் படுப்பார். ஒளரங்கசீப் மாமிசம் உண்ணாதவர். கொரின்தா என்ற புளிப்புச் சுவை நிறைந்த பழத்தை விரும்பிச் சாப்பிடுவார்.

அரசாங்க கஜானா பணமானது மக்களுக்கே உரியது, அரசு குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில் ஒளரங்கசீப் மிகவும் உறுதியாக இருந்தார். தன் சொந்தச் செலவுகளுக்கா ஒரு போதும் அவர் கஜானாவை உபயோகிக்க மாட்டார்.

பொதுவாக மன்னர்கள் தன் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்குக் காட்சி கொடுப்பதைப் பாரம்பர்யமாக வைத்திருந்தார்கள். ஆனால் எளிமை விரும்பியான ஒளரங்கசீப், தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும் சாதாரண தினமாகவே எடுத்துக் கொண்டார்.

ஒளரங்கசீப்புக்குக் குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்ஆனை தன் கைப்பட எழுதுவதில் அதீத விருப்பம் இருந்தது. அந்த இரண்டையும் விற்றுக் கிடைக்கும் பணத்தில் தன் தனிப்பட்ட செலவுகளைப் பார்த்துக் கொண்டார்.

மதுவை வெறுத்தவர். தன் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுவைத் தடை செய்தார். அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார். உல்லாச நிகழச்சிகள் நடத்தக் கூடாதென்று உத்தரவிட்டார். போதைப் பொருள்களையும் ஒழித்தார்.

இறந்த கணவனின் சடலத்தை வைத்து எரிக்கும்போதே, அதே நெருப்பில் மனைவியும் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் ஹிந்துக்களிடையே அதிகமாக இருந்தது. இது உடன்கட்டை அல்லது சதி என்றழைக்கப்பட்டது.

ஒருமுறை போர்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவனது மனைவியை அந்த நெருப்பில் குதிக்கச் சொல்லி சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒளரங்கசீப் அங்கு வந்தார். அந்த செயலைத் தடுத்தார். அங்கிருந்தவர்கள், தங்கள் மத விஷயத்தில் தலையிடக் கூடாதென்று வாதம் செய்தனர்.

ஆனால் ஒளரங்கசீப் விடவில்லை. 'இது அநயாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக் கூடாது. இந்தச் சம்பிரதாயத்தைத் தடை செய்கிறேன்' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காகப் பல்வேறு பிரிவினர்களிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்தச் சட்டத்தை செயல்படுத்த முடிந்தது.

நௌரோஸ் (Navroz) என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமையமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்தத்திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்குச் சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.
வீணாக அரசாங்கப்பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத ஒளரங்கசீப் நௌரோஸ் பண்டிகையை தடைச் செய்தார்.

No comments: