Tuesday, January 20, 2009

1. முற்றுகை

ஆக்ரா கோட்டை. உள்ளுக்குள்ளேயே நிறையக் கிணறுகள் இருந்தன. எல்லாம் வற்றாதவைதான். இருந்தாலும் எந்தக்கிணற்று நீரும் குடிப்பதற்பகுரிய சுவையில் இல்லை.

சாதாரண மக்கள் வேண்டுமானால் குடிப்பதற்கு லாயக்கற்ற நீரைக்குடிக்கலாம். பேரரசரால் முடியுமா?

அதுதான் அருகிலேயே சலசலத்து ஓடுகிறதே யமுனை. எவ்வளவு அழகான நதி! அற்புதமான சுவை கொண்ட நீர். முகலாய பேரரசர் ஷா ஜகான் குடிப்பதற்காகவே, ஆக்ரா கோட்டைக்குள் யமுனை நீர் செல்லும்படியான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த வசதிதான் ஒளரங்கசீப்புக்கு ஒரு வசதியான திட்டத்திற்கு வழி வகுத்துக்கொடுத்தது. கோட்டைக்குள் செல்லும் குடிநீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

இவ்வளவு தூரம் படையெடுத்து வந்து, எதிரிகளையெல்லாம் வீழ்த்தி, ஆக்ரா கோட்டையைச் சூழ்ந்தாயிற்று. ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை. மிகப்பெரிய, பாதுகாப்பான மதில் சுவர்கள். கோட்டைக்குள்தான் பேரரசர் ஷா ஜகான் இருக்கிறார். வயதான மனிதர். உடல்நிலை வேறு சரியில்லை.

அதனால் என்ன? உள்ளிருக்கும் ஆயிரத்து சொச்சம் வீரர்கள், எந்த நிலையிலும் எதிர்த் தாக்குதல் நடத்த தயாராகவே இருந்தார்கள். கோட்டைச் சுவரை பீரங்கிக்குண்டுகளால் துளைத்து உள்ளே நுழைவதெல்லாம் மிகவும் கடினமான காரியம். வாரக்கணக்கில் ஆகிவிடும். அதற்குள் வேறு எதிரிகள் யாராவது கிளம்பி வந்துவிட்டால், அவர்களோடு சண்டை போட வேண்டியதிருக்கும். தாமதமே கூடாது. இவ்வளவு நாட்கள் பட்ட கஷ்டங்களுக்குக்கெல்லாம் பலன் கிடைக்காமல் போய்விடக்கூடாது. ஆக்ரா கோட்டையைக் கைப்பற்றியே ஆக வேண்டும்.

எப்படி என்று யோசித்தபோதுதான், ஒளரங்கசீப்புக்கு குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் யோசனை உதித்தது. மூன்று நாட்கள் கழிந்தன. உள்ளே பேரரசர் ஷா ஜகானுக்கு மிகவும் கஷ்டமாகப் போயிற்று.

'தந்தையை இப்படியா கொடுமைப்படுத்துவாய்? தண்ணீரின்றித் தவிக்க விட்டிருக்கிறாயே?'
வெளியே நின்றிருக்கும் தன் மகன் ஒளரங்கசீப்புக்கு இப்படி ஒரு கடிதத்தை அனுப்பினார்.

'இதில் என் தவறு ஏதுமில்லை. உங்களுடைய இந்த நிலைக்குக் காரணம் நீங்களேதான்' - என்று பதில்கடிதம் அனுப்பினார் ஒளரங்கசீப். இதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்றுணர்ந்த ஷாஜகான், தன் தளபதி பாசில்கானைத் தூது அனுப்பினார்.

'பேரரசர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்' என்று பாசில்கான், ஒளரங்கசீப்பினடம் கூறினார்.

'எனக்கும் அதில் விருப்பம் உண்டு. என் தந்தை மேல் நான் கொண்டுள்ள பாசம் என்பது யாராலும் புரிந்துக்கொள்ள இயலாதது. ஆனால் நான் அவரைச் சந்திக்க வேண்டுமெனில் அவர் சில விஷயங்களைச் செய்தே ஆக வேண்டும். எனது வீரர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவேண்டும். அதற்குப் பின்னரே நான் அவரைச் சந்திக்க வருவேன். என்னால் அவருக்கு எந்த தீங்கும் நேராது. இதை உங்கள் பேரரசரிடம் சொல்லுங்கள்.'

ஒளரங்கசீப்பின் பதிலைக் கேட்ட ஷா ஜகான், கோட்டைக் கதவுகளைத் திறிந்துவிட்டார் அது கி.பி. 1658, ஜூன் 8. ஒளரங்கசீப்பின் முதல் மகன் சுல்தான் முகமது கோட்டையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தன் தாத்தா ஷாஜகானை உரிய மரியாதையோடு சென்று சந்திதார் முகமது.

இரண்டு நாட்கள் கழித்து, ஷா ஜகானின் செல்ல மகளும், இளவரசியுமான ஜஹனாராவிடமிருந்து ஒளரங்கசீப்பிக்கு ஒரு கடிதம் வந்தது.

'பேரரசின் பெரும்பகுதியை நீயே எடுத்துக்கொள். ஆட்சி செய். நீ முடி சூட்டிக் கொள்வதில் நம் தந்தைக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அனால் உன் சகோதரர்களுக்குச் சேர வேண்டிய சில பகுதிகளை மட்டும் விட்டுக்கொடுத்துவிடு. இது சம்பந்தமாகத் தந்தை உன்னிடம் நேரடியாகப் பேச விரும்புகிறார். அதுதான் நீ அவருக்குச் செய்யும் மரியாதை.'

ஒளரங்கசீப் தன் சகோதரியின் வார்த்தைகளை மதித்தார். கண்டிப்பாகச் சந்திக்க வருவதாகச் சொல்லி பதில் அனுப்பினார். தன் படையினருடன் கிளம்பி, ஆக்ரா கோட்டைக்குப் பேரணியாகச் சென்று சந்திக்லாம் என்று கிளம்பினார். அந்த நேரத்தில் ஒளரங்கசீப்பின் இளைய சகோதரி ரோஷனாரா அங்கு வந்தார். அவருக்கு ஒளரங்கசீப் மேல் தனிப்பாசம் உண்டு.

'எங்கே புறப்பட்டு விட்டாய் சகோதரா?'

கடிதத்தைக் காண்பித்தார் ஒளரங்கசீப்.

'எனக்கு எல்லாம் தெரியும். இது சம்பந்தமாக உன்னை எச்சரித்துவிட்டுப் போகத்தான் வந்தேன். தந்தை உன்னைக் காண பாசத்துடன் காத்திருக்கிறார் என்றா நினைக்கிறாய்?'

'பின் வேறு என்ன? இந்த வயதான காலத்தில் அவரால் என்னை என்ன செய்துவிட முடியும்?'

'நீ தப்புக்கணக்குப் போடுகிறாய் சகோதரா. உன்னை ஆக்ரா கோட்டைக்குள் அழைத்து, பேசுவதுபோல நடித்து அங்குள்ள பலம் வாய்ந்த பெண்களால் தாக்கிக் கொலை செய்வதாகத் திட்டம். இந்தக் கடிதத்தை அனுப்பியது ஜஹனரா தானே. உன் மீது கொஞ்சம்கூடப் பாசம் இல்லாத அவளது வார்த்தைகளை நீ எப்படி நம்பினாய்?'

ஒளரங்கசீப்பின் மனம் கொதித்தது. உடனடியாகத் தன் தளபதியை அழைத்து ஓர் உத்தரவிட்டார்.

'ஷா-இன்-ஷாவை இப்போதே கைது செய்யுங்கள். யாருடனும் அவருக்குப் பேச அனுமதி கிடையாது. என் உத்தரவின்றி யாரும் அவரைச் சந்திக்கக்கூடாது. ஆனால்ஒரு பேரரசருக்குறிய மரியாதை எந்தவிதத்திலும் குறயைக்கூடாது. எல்லா வசதிகளுடனும் அவர் இருக்கின்ற இடத்திலேயே சுதந்திரமாக வாழலாம். அவருடைய முதல் மகள் ஜஹானாராவை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பினால், அனுமதிக்கவும்.'

ஒளரங்கசீப்பின் கட்டளை செயல்படுத்தப்பட்டது. ஷா ஜஹான் தன் இறுதி நாள்களை ஆக்ரா கோட்டையில், அரண்மனைக் கைதியாகக் கழித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் (1666) பிறகு இறந்துப் போனார்.

அந்தச்சமயத்தில் ஒளரங்கசீப் ஆக்ராவில் இல்லை. ஆனால் தன் தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற செய்தி அறிந்த உடனேயே தன் மகன்களளை ஆக்ராவுக்கு அனுப்பினார்.

ஷா ஜகான் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி உரிய மரியாதைகள் செய்யப்பட்டன. சந்தனமரப் பெட்டியில் வைக்கப்பட்டு, படகில் ஏற்றப்பட்ட உடல், யமுனை நதியில் பயணம் செய்து, தாஜ்மஹாலை அடைந்தது.

அவரது அன்பு மனைவி மும்தாஜின் நினைவிடத்துக்குப் பக்கத்திலேயே, ஷா ஜஹானின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஒளரங்கசீப் பொல்லாதவர். கெட்டவர். இரக்கக் குணமே இல்லாதவர். மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர். ஹிந்துக் கோயில்களை இடித்தவர். தன் தந்தையை வயதான காலத்தில் சிறையில் வைத்துக் கொடுமைப்படுத்தினார். ஒளரங்கசீப்பால் தான் முகலாயப் பேரரசே முடிவுக்கு வந்தது.
முகலாய வம்சத்தின் கடைசிப் பேரரசர் ஒளரங்கசீப் பற்றி நம் பாடப்புத்தகங்கள் சொல்லும் விஷயங்கள் இப்படி எதிர்மறையாகத்தான் இருக்கின்றன.

இதில் எவ்வளவு சதவிகிதம் உண்மை இருக்கிறது?

ஷாஜகானின் கடைசிக் காலத்தில் ஒளரங்கசீப் அவரைக் கெளரவமாக அரண்மனைச் சிறையில் வைத்திருந்தாரே தவிர, கொடுமையெல்லாம் படுத்தவில்லை என்று பர்த்தோம். ஷாஜகானின் உடலகூட உரிய மரியாதைகளுடனேயே அடக்கம் செய்யப்பட்டது. அதுவும் அவரது பிரியத்துக்குரிய தாஜ்மஹாலில், மும்தாஜ் உடலுக்கு அருகிலேயே.
பின் ஏன் இப்படி முரண்பாடுகள்? ஒளரங்கசீப்பை, ஷாஜகான் வெறுத்தது ஏன்? சொந்த மகனையே கொலை செய்யத் திட்டமிடக் காரணம்? தன் தந்தை மீதே ஒளரங்கசீப் படையெடுக்கக் காரணம்? தன் சகோதரர்களை எல்லாம் கொன்றுவிட்டு, பேரரசராகத் தன்னை ஆக்கிக்கொண்டதன் பின்னணி? வாழ்க்கை முழுவதையும் புன்னகை என்ற ஒன்றை மறந்து, இறுக்கத்துடனேயே கழித்தாரே, ஏன்?பார்க்கலாம். சரித்திரத்தில் முற்றிலும் தவறாகச் சித்தரிக்கப்பட்ட முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் பற்றிச் சரியாக புரிந்துகொள்ளலாம்.

No comments: