Tuesday, January 20, 2009

2. பணயக் கைதி

முகலாயர்களின் முதல் பேரரசர் பாபர் இறந்தப்பிறகு, அவரது மகன் ஹூமாயூன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அரியாசனம் ஏறினார். ஹூமாயூன் ஒரு விபத்தில் இறந்துவிட, மிகச்சிறிய வயதிலேயே அக்பர் பதவிக்கு வந்தார்.
ஆனால் அக்பருக்குப் பின் அவரது மகன் ஜஹாங்கீர் பதவிக்கு வருவதில் தந்தை - மகன் மனஸ்தாபங்கள் இருந்தன. ஜஹாங்கீருக்கும் அவருடைய மகன் ஷாஜகானுக்கும் ஒத்து வரவில்லை.
தனக்குப் பின் ஷாஜகனைத்தான் முகலாயப் பேரரசராக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஜஹாங்கீருக்கு இல்லை. காரணம், ஷாஜகான் ஜஹாங்கீரின் மூன்றாவது மகன். ஷாஜகானுக்கு தான் ஷா-இன்-ஷா ஆக வேண்டும் என்ற ஆசை. எனவே, முகலாயப் படைகளின் தளபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஷாஜகான், ஜஹாங்கீரின் ஆளுகைக்குக் கீழிருந்த பகுதிகளிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஆரம்பித்தார். விளைவு?
ஜஹாங்கீருக்குக் கடும் கோபம். தன் படைகளை அனுப்பி ஷாஜஹானை அடக்கினார். எச்சரித்தார்.தகவல் ஒன்றை அனுப்பினார்.
'நான் உன்னைக் கைது செய்துவிடலாம். வேண்டாம் இனியாவது ஒழுங்காக இரு. உனக்குப் பதிலாக உன் மகனை என்னிடம் பணயக் கைதியாக அனுப்பி வை.'
ஷாஜஹான், ஜஹாங்கீரின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். எந்த மகனை அனுப்பி வைக்கலாம்?
ஷாஜஹானுக்கு மொத்தம் பத்து மனைவியர்கள். மூன்றாவது மனைவிதான் மும்தாஜ் மஹால் பேகம். மற்ற மனைவியரைவிட மும்தாஜ் மீது மட்டும் ஷாஜஹானுக்குக் காதல் அதிகம். மொத்தம் ஏழு குழந்தைகள்.
முதல் மகள் ஜஹனாரா பேகம், முதல் மகன் தாரா ஷீகோ, இரண்டாவது மகன் ஷா ஷூஜா, இரண்டாவது மகள் ரோஷனாரா பேகம், மூன்றாவது மகன் ஒளரங்கசீப்*, நான்காவது மகன் முராட் பக்ஷ், கடைசி மகள் கௌஹாரா பேகம்.
-----------------------------------------------------------------------------------------------
* ஒளரங்கசீப் 1618, நவம்பர் 3-ல் பம்பாய் மாகாணத்திலிருந்த டாஹோட் (Dahod) என்ற இடத்தில் பிறந்தார்.
------------------------------------------------------------------------------------------------
மூத்தமகன் தாரா மீது ஷாஜஹானுக்கு அளவுக்கடநத பாசம் உண்டு. முதல் ஆண் வாரிசு தான் தனக்குப் பின்பு அரசாள வேண்டும் என்ற எண்ணம். அதேபோல, மூத்த மகள் ஜஹனாரா மீதும் ஏராளமான அன்பு செலுத்தினார் ஷாஜஹான். காரணம் அவள், தோற்றத்தில் மும்தாஜைப் பொலவே இருப்பாள்.
'ஜஹாங்கீர், பணயக் கைதியாக உன் மகனை அனுப்பி வை என்று தானே சொல்லியிருக்கிறார். எந்த மகனை என்று சொல்லவில்லையே. முதல் மகன் தாரா எனக்கு மிகவும் முக்கியமானவன். வெண்டுமென்றால் மூன்றாவது மகன் ஒளரங்கசீப்பை அனுப்பலாம்' - இப்படி முடிவெடுத்த ஷாஜஹான் ஒளரங்கசீப்பைக் கூப்பிட்டு அனுப்பினார்.
'மகனே, நீ சிறிதுகாலம் உன் தாத்தாவின் அரண்மனையில் இருந்துவிட்டு வா, அங்கேயே நீ படிக்கலாம். சுதந்திரமாகச் சுற்றி வரலாம். சென்று வா.'
இந்த சம்பவம் சிறுவயதில் ஒளரங்கசீப்பின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்தது. 'எனக்கு அண்ணன்கள் இருவர் இருக்கும் போது, என்னை பணயக் கைதியாக அனுப்புகிறாரே, அப்படியானால் நான் அவருக்கு வேண்டாத பிள்ளையா?: - மிகவும் குழம்பிப் போனார் ஒளரங்கசீப்.
ஆனால் ஜஹாங்கீர், தன் பேரனை மனமகிழ்ச்சியுடன் வரவேற்றார். அனாலும் ஷாஜஹானுக்கு மீண்டும் ஒரு செய்தி அனுப்பினார். 'என்னை ஏன் ஏமாற்ற நினைக்கிறாய்? நான் அனுப்பச் சொன்னது உன் மூத்த செல்ல மகன் தாராவை. அவனை அனுப்பி வை. அப்போதுதான் உன்னை மன்னிக்க முடியும்.'
ஷாஜஹானுக்கு வேறு வழியில்லை. தாராவை ஜஹாங்கீரிடம் அனுப்பிவைத்தார். இருவரும் தங்கள் தாத்தாவின் அரண்மனையிலேயே வளர்ந்தனர், படித்தனர். 1627-ல் ஜஹாங்கீர் இறந்து போனார். தாராவும் ஒளரங்கசீப்பும் தங்கள் பெற்றோர்களிடம் திரும்பினார்கள்.
'என் தந்தை பாரபட்சமாக நடந்துகொள்கிறார். என்னை விட அவருக்குத் தாராதான் முக்கியமானவன். நான் இனி அவர்மீது பாசம் வைக்கப்போவதில்லை' - ஷாஜஹானிடம் திரும்பியபோதும். ஒளரங்கசீப்புக்குள் அந்தக் கோபம் வளர்ந்துக்கொண்டே போனது. ஷாஜஹானுக்குப் பிரியமனா மகன் என்பதால் தாரா மீதும் வெறுப்பு வளர்ந்தது.
தன் மகன்களுக்கும் மகள்களுக்கும் செலவுக்காகத் தினமும் பணம் அளிக்கும் வழக்கம் ஷாஜஹானுக்கு இருந்தது. தாராவுக்குக் கொடுக்கும் பணத்தில் சரி பாதியைத்தான் ஒளரங்கசீப்புக்கு அளித்தார் அவர். இது ஒளரங்கசீப்பை மேலும் காயப்படுத்தியது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அந்த மைதானம் எங்கும் மக்களின் ஆராவாரம். உற்சாகக் கைத்தட்டல்.
பேரரசர் ஷாஜஹான் உப்பரிகையில் உட்கார்ந்திருந்தார் நடந்துகொண்டிருந்தவற்றை ரசித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் விதவிதமான சண்டைகள் நடந்து கொண்டிருந்தன.
முக்கியமாக யானைச்சண்டை. இரண்டு யானைகள். அதன் மேல் இரண்டு வீரர்கள். மோதிக் கொண்டனர். சராமாரியாக ஈட்டிகள் பாய்ந்துக் கொண்டிரந்தன. மைதானத்தில் வேறு யானைகளும் நின்றுக் கொண்டிருந்தன.
திடீரென்று பாய்ந்து வந்த ஓர் ஈட்டி, ஓரமாக நின்றுக் கொண்டிருந்த ஒரு யானையின் காதைப் பதம் பார்த்தது. யானைக்கு ஆத்திரம் தலைக்கேறியது. மதம் பிடித்தது போல மைதானத்தின் உள்ளே ஓட ஆரம்பித்தது. உள்ளேயிருந்த மற்ற வீரர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
மைதானத்தின் உள்ளே தான் இருந்தார் ஒளரங்கசீப். யானை அவரை நோக்கித்தான் ஓடி வந்து கொண்டிருந்தது. மக்கள் எல்லோரும், இளவரசரை அங்கிருந்து ஓடிப்போகுமாறு கத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் ஓர் அடிகூட பின்னால் நகரவில்லை.
தன் கையிலிருந்த ஈட்டியைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். யானை வேகத்தை அதிகரித்து ஒளரங்கசீப்பை நெருங்கியது.
ஈட்டியை வீசுவதற்கு தயாராக இருந்த அவர், அதன் நெற்றியைக் குறிபார்த்து எறிந்தார். நிலைகுலைந்து போன யானை கீழே விழுந்தது. அடுத்த நொடி மைதானமே அதிர்ந்தது. அப்போது அவருக்கு வயது பதினைந்து.
ஷாஜஹான் பயந்தேபோனார். ஒளரங்கசீப்பை அழைந்தார்.
'ஏன் இப்படி ஒரு விபரீத விளையாட்டில் இறங்குகிறாய்?' என்று கடிந்து கொண்டர்.
'நான் என் வீரத்தைக் காட்டினேன். இம்மாதிரி வீரச்செயல்களின்போது மரணம் நேர்ந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளலாமே!' என்றார் ஒளரங்கசீப் சிரித்துக் கொண்டே.
அந்தப் பதிலுக்கு எதிராகப் பேச முடியாத ஷாஜஹான் ஒளரங்கசீப்புக்கு பகதூர்ஷா என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், தனது பதிமூன்றாவது பிரசவத்தில் இறந்து போனார் (1631, ஜூன்). ஷாஜஹானால் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பேரரசு முழுவதும் ஒரு வருடம் துக்கத்தை அறிவித்தார். எல்லாக் கொண்டாட்டங்களும் நிறுத்தப்பட்டன.
'என் நினைவாக, நம் காதலின் அடையாளமாக சின்னம் ஒன்றை நீங்கள் கட்ட வேண்டும். இது என் கடைசி ஆசை.' மும்தாஜ் உயிரைவிடுவதற்கு முன் சொன்ன வார்த்தைகள் ஷாஜஹானின் காதினுள் ஒலித்துக் கொண்டே இருந்தன.
மும்தாஜூக்கென்று ஒரு நினைவு மாளிகை கட்ட வேண்டுமென்று திட்டமிட ஆரம்பிதார். இதுவரை முகலாயர்கள் கட்டியதிலேயே மிகவும் பிரம்மாண்டமான மாளிகையாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். அதற்காகப் பாரசீகத்திலிருந்து கட்டடக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டார்கள். கட்டடத்தின் வரைபடங்கள் உருவாக்கப்பட்டன.
தாஜ்மஹால் கட்டுவதற்கு யமுனை நதிக்கரையொரமாக இடம் தேர்வுசெய்யப்பட்டது. தாஜ்மஹால் கட்டடம், அதைச்சுற்றி அமையவிருக்கும் தோட்டத்துக்கான அளவு, கட்டடத்துக்கு வெளியே மன் பகுதியல் அமையவிருக்கும் நீரூற்றுக்களுக்கான இடம் எல்லாம் முடிவு செய்யப்பட்டன.
வேலை செய்ய எத்தனை ஆள்கள் தேவைப்படும், எவ்வளவு வருடங்கள் பிடிக்கும், பணம் எவ்வளவு செலவாகும் என்பது பற்றியெல்லாம் ஷாஜஹான் கவலைப்படவே இல்லை. வசூலாகிய வரிப் பணம் அனைத்தையும் கட்டடப் பணிகளுக்காகவே செலவழித்தார். தனக்குக்கீழிருக்கும் அரசர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் அதிக வரிகேட்டு வற்புறுத்தினார்.
மக்களிடமிருந்த பணமெல்லாம் உறிஞ்சப்பட்டது. அவர்கள் தாஜ்மஹால் கட்டட வேலையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பேரரசின் பொருளாதார நிலை படுமோசமாகிப் பொனது.
ஆனால் ஷாஜஹானுக்கு மக்கள் முக்கியமாகத் தெரியவில்லை. தன் மனைவிக்காகக் கட்டும் கட்டடம் மட்டுமே நினைவில் இருந்தது.
இது ஒளரங்கசீப்புக்குப் பிடிக்கவில்லை. மக்களைத் துன்புறுத்தி இப்படி ஒரு நினைவுச்சின்னம் தேவைதானா என்று நினைத்தார். ஆனால் அந்தச் சிறுவயதில் அவரால் பேரரசரை எதிர்த்துப் பேசக் கூட முடியவில்லை.
1632-ல் ஆரம்பித்த தாஜ்மஹாலின் கட்டடப்பணிகள் 1648-ல் தனர் நிறைவடைந்தன. தன்னுடைய அன்பு மனைவயின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷத்தில் கண்ணீர் வடித்தார் ஷாஜஹான். அனால் மக்கள் வறுமையினால் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள். தாஜ்மஹாலுக்காக செலவிடப்பட்ட தொகை முப்பத்திஇரண்டு மில்லியன் என்று ஒரு தகவல் உண்டு. இல்லை, செலவுத் தொகையைக் கணக்கிடவே முடியாது என்று பல வரலாற்று அறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.
எளிமை விரும்பியான ஒளரங்கசீப்பின் கண்களுக்குத் தாஜ்மஹால் அழகாகத் தெரியவில்லை, துயரமாகவே தெரிந்தது.
மேலும் ஒரு தகவலைக் கேள்விப்பட்ட அவர் அதிர்ச்சியடைந்தார். ஷாஜஹானுக்கும் தாராவுக்கும் இடையே நடந்த உரையாடல் அது.
'என் அன்பு மனைவியின் ஆசைப்படி தாஜ்மஹாலைக் கட்டி எழுப்பிவிட்டேன். அதனை என் காலம் முழுவதும் பார்த்துக்கொண்டே இருப்பேன். இந்த ஆக்ராவை விட்டு நான் எங்கும் செல்லவே மாட்டேன். ஆனால் இறப்புக்குப்பின் என்ன செய்வேன்?'
'வேதனைப்படாதீர்கள் தந்தையே! தங்கள் ஆசை என்னவென்று கூறுங்கள். நிறைவேற்றுகிறேன்.'
'மும்தாஜூக்காக இந்த வெள்ளைக்கல் மாளிகை. என் மரணத்திற்குப்பின் அவள் அருகிலேயே நிரந்தரமாக ஓய்வெடுக்குமாறு, ஒரு கருப்புக்கல் மாளிகையை எனக்காக உருவாக்க ஆசைப்படுகிறேன். நிறைவேற்றுவாயா தாரா?'
'நிச்சயமாகத் தந்தையே! உங்கள் ஆசையை நிறைவேற்றுவதே என் லட்சியம்.'
ஒரு தாஜ்மஹால் கட்டியதாலேயே ஏராளமான இழப்புகள். இன்னொரு கறுப்புக்கல் மாளிகை கட்டினால்? ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை உண்டாக்கியது.
இஸ்லாமிய நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர் ஒளரங்கசீப். ஆனால் தாரா, அக்பரது கொள்கையைக் கொண்டிருந்தார். எல்லா மதத்தினரையும் ஆதரித்தார். முக்கியமாக ஹிந்து மதநூல்களை எல்லாம் படித்தார். உபநிஷதங்களை மொழிப்பெயர்த்து, சரி-உல்-அஸ்ரார் என்று பெயரிட்டார்.
தாராவின் செயல்களுக்கு ஷாஜஹான் ஆதரவளித்துவந்தார். ஆனால் ஒளரங்கசீப்பின் பார்வையில் அவை மதவிரோதக் காரியங்களாகத் தெரிந்தன. இதுபோன்ற பல விஷயங்கள் ஒளரங்கசீப்புக்கும் ஷாஜஹானுக்குமிடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியது. தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்குமிடையே தீராத பகையை தோற்றுவித்தன.

No comments: