Tuesday, January 20, 2009

10. உயில்

முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தார் ஒளரங்கசீப். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் (1657 - 1707).

வயது தொண்ணூறு. இத்தனை வருடங்கள் போர் போர் என்று ஓடிவிட்டது. இந்தியா முழுவதும் கட்டியாள வேண்டும் என்ற பெருங்கனவில் பெரும் பகுதி நிறைவேறிவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி. சில வருடங்களில் அவற்றையும் பிடித்துவிடலாம்.

என்ன செய்ய? முதுமை ஆட்கொண்டுவிட்டது. உடல் ஒத்துழைக்கவில்லை. மரணத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

தனக்குப்பின் தன் வாரிசுகள், இந்தப் பேரரசைகட்டிக்காப்பார்களா? பாபர் காலத்தில் ஆரம்பித்த போர்கள், ஆக்கிரமிப்புகள். கிட்டத்தட்ட நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று எவ்வளவே பரந்து விரிந்திருக்கிறது. நிலைக்குமா? கவலை, அவரது சுருங்கிய கன்னங்களில் சுடத் தெரிந்தது.

தான் மாட்டிக் கொண்டது போல, தனக்குச் சகோதரர்களுடன் நேர்ந்தது போல வாரிசுரிமைப் போர், தன் மகன்களுக்கு இடையேயும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தார். ஆட்சிப் பகுதிகளைப் பரித்துக் கொடுத்து உயில் எழுதி வைத்தார்.

'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச்சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்றுச் சேர்த்த பணத்தில் கொஞ்சம் அஜ்யா பேக்கிடம் இருக்கிறது. அந்தப் பணத்தை கொண்டு என் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

தன்னைக் காண வந்த மகன் பகதூர் ஷாவிடம் மனம் விட்டுப் பேசினார்.

'நான் உலகத்துக்குத் தனியாக வந்தேன். இந்த உலகத்தை விட்டு வேற்று மனிதனாகப் போகப்போகின்றேன். நான் யார் என்று என்னால் இதுவரை உணர முடியவில்லை. இங்கு வந்து என்ன செய்தேன் என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நிறையப் பாவங்களை செய்துள்ளேன். எனக்காக என்னென்ன தண்டனைகள் காத்திருக்கின்றன என்று தெரியவில்லை.'

1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

ஒளரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப் பெரிய பேரரசை கவனிக்க அவருக்குத் திறமையில்லை. ஒளரங்கசீப் காலத்திலேயே, கொஞ்சகொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர்.

ஒளரங்கசீப் மறைந்த நூறாண்டுகளுக்குள்ளாகவே முகலாயப் பேரரசு முகவரியின்றிப் போனது. இருந்த கொஞ்சநஞ்ச முகலாய ஆட்சியாளாகளும் மராட்டியர்களின் கைப்பொம்மையாக இருந்தனர்.
அப்போது இந்தியாவில் தன் முத்திரையைப் பதிக்க பலமாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தது பிரிட்டனில் இருந்து வந்த கிழக்கிந்திய கம்பெனி.

No comments: