Tuesday, January 20, 2009

5. வாரிசு உரிமைப் போர்

ஒளரங்கசீப் தன் மூத்த மகன் முஹம்மத் கல்தானுக்கும், தனது சகோதரர் ஷூஜாவின் மகளுக்கும் திருமண ஏற்பாடு செய்தார். அதேபோல, தன் மகளுக்கு, ஷூஜாவின் மகனை மணமுடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார். காரணம் குடும்ப உறவுகளை சகோதரர்களுக்குள் பலபடுத்திக் கொள்வதற்கான ஏற்பாடு.

ஆனால் ஷாஜஹான் இந்த திருமணங்களை எதிர்த்தார். சகோதரர்கள் இருவரும் இப்படிக் கூட்டணி சோந்து கொண்டால், தன் மூத்த மகன் தாராவுக்கு ஆபத்தாகிவிடுமே என்ற பயம் தான் காரணம்.

'நீ உன் பிள்ளைகளுக்கு வேறு இடத்தில் மணமுடித்துக் கொடு, இதில் எனக்கு விருப்பமில்லை' என்று கடிதம் அனுப்பினார் ஷாஜஹான்.

' நான் வாக்கு கொடுத்துவிட்டேன். இனிமேல் திருமணத்தை நிறுத்தமுடியாது. மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதில் கடிதம் அனுப்பினார் ஒளரங்கசீப். ஷாஜஹானால் ஆத்திரத்தை அடக்கமுடியவில்லை. ஒளரங்கசீப்புக்காக வழங்கியிருந்த ஆசிர் (Asir) கோட்டையைப் பிடுங்கிக் கொண்டார்.

கோல்கொண்டா சுல்தான், வருடந்தோறும் முகலாய அரசுக்கு வரி செலுத்தி வந்தார். திடீரென்று அதை நிறுத்திவிட்டார். ஒளரங்கசீப், 'ஏன் வரி செலுத்தவில்லை?' என்று கடிதம் எழுதினார். சுல்தானிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 'செலுத்த வேண்டிய வரித்தொகையில் பாதியை ஈடுகட்டும் விதமாக யானைகளை அனுப்பிவையுங்கள்' என்றும் கடிதம் அனுப்பினார். அதற்கும் பதிலில்லை.

இந்த நிலையில், கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்கள் என்னுடைய அரசைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து காப்பாற்றினால் நான் முகலாயப் பேரரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்' என்று சந்திரகிரி அரசர் ரங்க ராயலு ஒளரங்கசீப்புக்கு வேண்டுகோள் அனுப்பினார். சந்திரகிரி என்பது பழைய விஜயநகரப் பேரரசின் ஒரு சிறு பகுதி. கிருஷ்ணா நதிக்கு அருகில் அமைந்திருந்தது.

ஒளரங்கசீப், ரங்கரயலுக்கு உதவலாம் என்றிருந்த வேளையில், 'சந்திரகிரியைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள் என்று ஷாஜஹான், கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்களுக்கு உத்தரவிட்டார்.

இப்படி ஷாஜஹான் ஏறுக்கு மாறாகச் செய்து வந்த செயல்களினால் பொறுமையிழந்தார் ஒளரங்கசீப்.

'கவர்னர் என்ற பெயர். ஆனால் முழுமையான அதிகாரம் கையில் இல்லை. எந்த முடிவையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியவில்லை. மேற்கொண்டாலும் ஏகப்பட்ட தடைகளை உருவாக்குகிறார் ஷா-இன்ஷா. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு மேலும் பணிந்து போவது முகலாயப் பேரரசுக்கு நல்லதல்ல.'

முடிவெடுத்த ஒளரங்கசீப், முதலில் கோல்கொண்டாவைக் கைப்பற்ற படைகளோடு கிளம்பினார். 1657-ல் கோல்கொண்டாவை வெற்றி கொண்டார். அதற்குப் பின் பிஜப்பூர் மீதும் போர் தொடுத்தார். அப்போது அளரங்கசீப்புக்கு உதவியாக இருந்தவர் மராட்டிய வீரர்சிவாஜி. (அவர் ஏன் உதவினார், அதன் பின்னணி என்ன எனபதைப் பின்னால் பார்ப்போம்.)

வெற்றி நெருங்கும் வேளையில் ஒரு செய்தி வந்தது. ஒளரஙகசீப் படைகளோடு பிஜப்பூரைவிட்டுப் புறப்பட்டார்.

ஷாஜஹானின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது - என்பதே அந்தச் செய்தி.

ஆனால் அவர் இறந்துவிட்டார் என்ற வதந்தி பல இடங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து, 'தாரா தானட அடுத்த பேரரசராக முடிசூட்டிக் கொள்ளப்போகிறார் என்ற செய்தியும் பரவியது. தாராவின் நடவடிக்கைகளும் அதை உறுதிப்படுத்துவது போலத்தான் இருந்தன. அப்போது தாராவுக்கு வயது 43.

ஷூஜா (வயது 41). தன்னை வங்காளத்தின் அரசராக அறிவித்துக்கொண்டார். முடிசூட்டக் கொண்டார். தன் பெயரிலேயே புதிய நாணயங்களை வெளியிட்டார். ஆக்ராவைக் கைப்பற்றப்போவதாகவும் அறிவித்தார். இது ஷாஜஹானைக் கோபத்திற்குள்ளாக்கியது. தாரவின் படைகளும், ஷாஜஹானின் படைகளும் வங்காளம் நோக்கிச் சென்றன. நடைபெற்ற போரில் ஷூஜா அடக்கப்பட்டார்.

இன்னொரு சகோதரரான முராட் (வயது 33) தன்னை குஜராத்தின் அரசராக அறிவித்து முடிசூட்டிக்கொண்டார். நாணயங்களை வெளியிட்டார். அவருக்கு ஒளரங்கசீப்பின் ஆதரவும் இருந்தது. ஒளரங்கசீப் தன் படைகளோடு கிளம்பி ஆக்ராவை நோக்கிப் பயணம் செய்தார். வழியில் இருந்த பகுதிகளின் ஆட்சியாளர்கள் ஆதரவை எல்லாம் திரட்டினார். முராட்டும் தன் படைகளோடு இணைத்துக் கொண்டார்.

இந'த நேரத்தில்ஈ தாராவைப் பேரரசராக்கப்போவதாக ஷாஜஹான் அறிவித்தார். இது ஒளரங்கசீப்புக்கும், முராட்டுக்கும் பெரும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

ஆக்ராவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த அவர்களை மகாராஜா ஜஸ்வந்த் சிங் எதிர்த்து நின்றார். உஜ்ஜைனி அருகே தர்மத்பூரில் போர் தொடங்கியது. பல நாள்கள் தொடர்ந்தது. முடிவில் ஒளரங்கசீப் வென்றார்.

அவரது படைகள் முன்னேறின. சம்பல் பள்ளத்தாக்குகளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு ஜஹானாராவிடமிருந்து ஒரு கடிதம் வந்து சேர்ந்தது.

'நம் தந்தை பேரரசர் ஷாஜஹான் முழுவதுமாகக் குணமடைந்துவிட்டார். மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் நீ ஆக்ராவை நோக்கிப் படைகளுடன் கிளம்பி வருவதென்பது, துரோகத்துக்குரிற செயலாகும். தாராவை எதிர்ப்பதும் அப்படியே. எனவே, நீ தக்காணத்துக்கு திரும்பிச் செல்வதே தந்தைக்குக் கொடுக்கும் மரியாதை'

ஒளரங்கசீப் பதில் கடிதம் எழுதினார்.

'தாராவின் செயல்கள் வரம்பு மீறிவிட்டன. என் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிய தருணம் இது. அதைவிட, என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். தாரா ஆக்ராவில் இருப்பது சரியல்ல, அவனை பஞ்சாப்புக்கு மாற்றுங்கள். ஒரு மகனாக நோயுற்று இருக்கும் என் தந்தையைக் காண வருகிறேன். ஒரு கவர்னராக, பேரரசரைச் சந்தித்து என் மீது எந்தத் தவறும் இல்லை என்று நிரூபிப்பதற்காகவே ஆக்ரா நோக்கி வருகிறேன்.'

ஒளரங்கசீப்பின் இந்தக் கடிதம் ஷாஜஹானைக் கொஞ்சம் கலங்கடிக்கவே செய்தது. 'ஆக்ராவுக்கு வரும் ஒளரங்கசிப்பை சந்திக்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன், என்றொரு பதில் அனுப்பினார். அத்துடன் 'ஆலம்கீர்', (உலகை வென்றவர்) என்று பொறிக்கப்பட்ட வாள் ஒன்றையும் பரிசாக அனுப்பிவைத்தார்.

சாமுகர் (Samugarh) பகுதியில், ஒளரங்கசீப்பின் படைகளுக்கும் தாரவின் படைகளுக்கும் கடுமையான மோதல் நடந்தது. சில மாதங்கள் போர் நீடித்தது. ஒளரங்கசீப்பின் படைகள் வலுபெற்றன. தாக்குப்பிடிக்க முடியாத தாரா, தப்பி ஓடினார். ஒளரங்கசீப், தன் படையினருடன் முன்னேறி ஆக்ராவைச் சூழ்ந்தார். கைப்பற்றினார்.

ஷாஜஹான் அரண்மனையிலேயே சிறைப்படுத்தப்பட்டார் என்று முதல் அத்தியாயத்திலேயே பார்த்தோம். தாரா தோல்வி அடைந்து தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி ஷாஜஹானை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. இருந்தாலும் எப்படியாவது தாரா, படைதிரட்டிக்கொண்டு வந்து மீண்டும் ஆக்ராவைக் கைப்பற்றிவிடுவார் என்று நம்பினார் ஷாஜஹான்.

தனது இன்னொரு மகன் முராட்டுக்கு கடிதமொன்றை எழுதினார். 'நீ உன் படை பலத்தால் ஆக்ராவைக் கைப்பற்று. ஒளரங்கசீப்பை ஒழித்துவிடு. நீ ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொள்.'

இந்த கடிதம் முராட்டிடம் சென்று சேர்ந்தது. அவரது கவனக்குறைவால் அதைத் தாலைத்துவிட்டார். அது ஒளரங்கசீப்பின் கைகளுக்குச் சென்றது. வாசித்துப்பார்த்த அவர், வேதனை அடைந்தார். ஷாஜஹான் இனி கடிதங்கள் எழுதக் கூடாதென்றும், அப்படி எழுத விரும்பினால் தன் மகன் முஹம்மது மூலமாகத் தான் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அவரவர்க்குரிய நகைகள் என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசுடைய சொத்துக்கள், மக்களுக்கானவை. எனவே, ஷாஜஹான் தன்னுடைய நகைகள் எல்லாவற்றையும் ஒப்படைக்க வேண்டும் என்று தன் மகன் முஹம்மது மூலம் சொல்லி அனுப்பினார். ஷாஜஹான் தான் சேர்த்து வைத்திருந்த நகைகளை ஒப்படைத்தார். தாராவின் நகைகளும் கைப்பற்றப்பட்டன. முகலாயர்களின் பரம்பரைச் சொத்தான மையிலாசனம் என்ற சிம்மாசனமும், ஒளரங்கசீப் கையில் வந்தது.

முராட், ஆக்ரா படையெடுப்பில் ஒளரங்கசீப்புக்கு கைக்கொடுத்தார். ஆனால் தான் பேரரசர் ஆவதற்குத் தடையாக இருக்கக்கூடாதென்று எண்ணத்தில் ஒளரங்கசீப் அவரைக் கொன்றுவிட்டார் என்றொரு செய்தி உண்டு. ஆக்ராவை கைப்பற்றிய சந்தோஷத்தில், முராட் ஏராளமாகக் குடித்துவிட்டு உல்லாசமாக இருந்தார். மது அருந்துவது இஸ்லாமுக்கு எதிரான செயல் எனவே, ஒளரங்கசீப் அவருக்கு மரண தண்டனை வழங்கினார் என்றும் தகவல் உண்டு.

உண்மையில் முராட் அதிக மது அருந்துபவர் தான். உல்லாசப்பிரியர் தான். அவரது நிர்வாகத்தில் குஜராத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. அதனை தீர்ப்பதற்காக, அலி நாகி என்றொரு வருவாய்த்துறை அமைச்சரை நியமித்தார் ஷாஜஹான்.

அலி நாகியின் கண்டிப்பான நிர்வாகத்தில், குளறுபடிகள் தீர்ந்தன. அதனால் ஊழல் செய்து வந்த பல அதிகாரிகள் முடக்கப்பட்டனர். அவர்கள் அலிநாகியை எப்படி பலிவாங்கலாம் என்று காத்திருந்தனர்.

ஆக்ராவின் வெற்றியை முராட் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது 'அலிநாகி தாராவுக்கு ஆதரவாக செயல்படுகிறார், அவரால் உங்கள் உயிருக்கு ஆபத்து, என்று ஒரு மொட்டைக் கடிதம் முராட்டுக்குச் சென்று சேர்ந்தது. அது, அலிநாகியின் எதிரிகள் சதி.

முராட்டுக்குக் கோபம் தலைக்கேறியது. அலிநாகியை கூப்பிட்டு அனுப்பினார். பார்க்க வந்தவரை என்னவென்று தீர விசாரிக்காமலேயே கொலையும் செய்தார்.

அலிநாகியை முராட் கொலை செய்த சம்பவம், ஒளரங்கசீப்பிடம் புகாராகச் சென்றது. குவாலியரில் உள்ள காஜிகளிடம் (Qazi, அதாவது நீதிபதிகள்) வழக்கை ஒப்படைத்தார் ஒளரங்கசீப். குற்றம் உறுதி செய்யப்பட்டு முராட்டுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சரி இன்னொரு சகோதரர். ஷூஜா என்ன ஆனார்? தனக்குத் தானே வங்காளத்தின் அரசராக முடிச்சூட்டிக் கொண்ட ஷூஜா, தாராவின் படைகளால் தோற்றடிக்கப்பட்டார் என்று பார்த்தோம். போர்களத்தில் இருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடினார்.

மெக் என்ற பழங்குடியினர் வாழும் இடத்தில் தஞ்சம் புகுந்தார். மீண்டும் வங்காளத்தைக் கைப்பற்ற முடியுமா? ஒளரங்கசீப் உதவுவாரா? இல்லை இனி தாரா தான் பேரரசரா? - என்று பல கேள்விகளுக்கான ஷூஜாவுக் தெரியவில்லை. உடன் ஒத்துழைக்கப் படைகளும் இல்லை. இனி ஒரு திரட்ட முடியுமா? அதற்கும் பதில் தெரியவில்லை.

மெக் பழங்குடியினர், அரக்கான் என்ற பகுதி அரசரின் ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்தனர். அந்த அரசரைக் கொன்றுவிட்டால் படைகள் கிடைக்கும். வங்காளத்தை மீண்டும் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டார் ஷூஜா.

ஆனால் ஷூஜாவின் சதி, வெளிப்பட்டது. அரசர் அவரைக் கொல்ல உத்தரவிட்டார். மெக் பழங்குடியினர் அவரைத் துரத்திப்பிடித்துக் கொன்றனர்.

மீதமிருக்கும் ஒரே சகோதரர் தாரா.

அப்போது அவரிடம் ஆயுதங்கள் இல்லை, ஆள் பலம் இல்லை, துணையாகக் கூட யாரும் இல்லை. ஆக்ராவை மீண்டும் கைப்பற்றுவதற்காகக் கனவு கூட காண முடியவில்லை. இவ்வளவு நாள்கள் அதரித்து வந்த பேரரசர் ஷாஜஹானே இப்போது ஒடுக்கப்பட்டுவிட்டார். பாசத்திறகுரிய இளவரசி ஜஹானாராவால் எதுவும் செய்ய முடியாத நிலை.

அடுத்து என்ன செய்ய?

இவ்வளவு நாள்கள் ஒளரங்கசீப் மீது காட்டிவந்த வெறுப்பு என்ன சாதரணமானதா? அவரிடமிருந்து மன்னிப்பெல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை. சிக்கினால் மரண தண்டனைதான்.

ஒரு காட்டுக்குள் பதுங்கியிருந்த தாராவின் எண்ணமெல்லாம் விரக்திதான் நிறைந்திருந்தது. அருகில் அவரது நாதிரா இறந்து கிடந்தார்.

அந்த நேரத்தில் மாலிக் கான் என்ற படைத்தளபதி அங்கு வந்தான். அவனைப் பார்த்ததும் தாராவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை துளிர்விட்டது. தாராவுக்கு விசுவாசமாக இருந்தவன் மாலிக். அவன் மூலமாக ஏதாவது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் மாலிக் அப்போது வந்திருந்தது தாராவைக் கைது செய்வதற்காக. அவர் எதிர்ப்புக் காட்டவில்லை. காட்டும் நிலையிலும் இல்லை. கைது செய்யப்பட்டு டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டார் தாரா. அங்கே அரசு சபைக் கூடியிருந்தது. ஒளரங்கசீப்பும் ரோஷனாராவும் அமர்ந்திருந்தனர். தாரா மீதான விசாரணை தொடங்கியது (1659).

'நீ ஒரு இஸ்லாமியனாக நடந்துக் கொள்ளவில்லை, மத துரோகம் செய்திருக்கிறாய்.'

ஒளரங்கசீப், தாராமீது கூறிய முக்கிய குற்றச்சாட்டு இது தான். அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நிறைவேற்றப்பட்டது. தாராவை சங்கிலிகளால் பிணைத்து, டெல்லி வீதிகளில் இழுத்துவந்தார்கள். அவரைக் கொன்று தலைமட்டும் ஷாஜஹானுக்கு அனுப்பி வைத்தார்கள். ஷாஜஹானைக் கொல்வதற்கும் ஒளரங்கசீப் சதி செய்தார். தன் பணியாளர்கள் மூலமாக ஓரிரு முறை உணவில் விஷம் கலந்து கொண்டுச் சென்றனர். ஆனால் அந்த பணியாளர்கள் தாங்களே விஷத்தை அருந்தி ஷாஜஹனை காப்பாற்றினர்.

இப்படி ஒளரங்கசீப் எதிரான செய்திகள் நிறையவே உலவுகின்றன.
தன் நாற்பதாவது வயதில் (1658), ஒளரங்கசீப் முகலாயப் பேரரசர் ஆனார்.

No comments: