Tuesday, January 20, 2009

7. சீக்கியர்களுடன் சிக்கல்

கி.பி 1500-ல் குருநானக்கால் உருவாக்கப்பட்டது சீக்கிய மதம். அக்பர் பிற மதத்தினரைப் போலவே சீக்கியர்களுக்கும் பெருமதிப்பு கொடுத்தார். அவர்களுக்குப் பெரிய பதவிகளையும் வழங்கி கௌரவித்தார். ஆனால் அவருக்குப்பின் முகலாயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் பிரச்சனைகள், போர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன.

சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜூன்சிங்குக்கும், ஜஹாங்கீருக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஆறாவது குருவான ஹர்கோவிந்த் சிங்குக்கும் ஷாஜஹானுக்கும் போர் நடந்திருக்கிறது.

ஷாஜஹானின் இறுதி நாள்களில், பேரரசர் பதவிக்காக நடந்த வாரிசு சண்டையில், சீக்கியர்களின் ஏழாவது குருவான ஹர்ராய்சிங், தாராவை ஆதரித்தார். ஆனால் ஒளரங்கசீப் பேரரசர் ஆனதும், தம் மகன் மூலம் சமாதானத்தூது அனுப்பினார்.

சில வருடங்களில் ஹர்ராய்சிங் இறந்து போனார். எட்டாவது குரு யாரென்று கேள்வி எழுந்தது. ஒளரங்கசீப்போடு பழகி வந்த சீக்கியரான ராம்ராய்சிங் தன்னை ஆதரிக்குமாறு ஒளரங்கசீப்பிடம் கேட்டுக் கொண்டார்.

அவரது இன்னொரு சகோதரரான ஹர்கிஷன்சிங்கும், அதே ஆவலோடு இருந்தார். ஆனால் சீக்கியர்களின் மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தான் தலையிடுவது சரியல்ல என்று மறுத்துவிட்டார் ஒளரங்கசீப்.

இறுதியில் ஹர்ஹிஷன்சிங் எட்டாவது குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சில நாள்களிலேயே அவர் அம்மை நோய்வந்து இறந்துப் போனார்.

இந'த முறையாவது தாம் குருவாக முடியுமா என்ற ஆசை ராம் ராய்சிங்குக்கு இருந்தது. ஆனால் ஆறாவது குருவான ஹர்கோவிந்த சிங்கின் இளைய மகன் தேஜ் பகதூர் ஒன்பதாவது குருவாக நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே முகலாயப்படைகளில் பணியாற்றியவர். நல்ல போர் வீரர்.

ஒருநாள் காஷ்மீரைச் சேர்ந்த பிராமணர்கள் சிலர், குரு தேஜ்பகதூரைச் சந்தித்தனர். முகலாயர்கள் எங்களை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் என்றும், நீங்கள் தான் எங்களைக்காப்பாற்ற வேண்டும் என்றும் அவரைக் கேட்டுக்கொண்டனர்.

தேஜ்பகதூர் அவர்களுக்கு உதவ முன் வந்தார். 'நானும் இஸ்லாம் மதத்திற்கு மாறினால் தான், அந்த பிராமணர்களும் மாறுவார்கள், என்று ஒளரங்கசீப்புக்குத் தகவல் அனுப்பினார் அவர். அதனால் முகலாயப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்று இஸ்லாமியராக மாற வேண்டும் அல்லது மரணம். தேஜ்பகதூர் மதம் மாற சம்மதிக்கவில்லை. கொல்லப்பட்டார்.

குரு தேஜ்பகதூரின் மரணத்திற்கு காரணம் இப்படியும் சில வரலாற்று ஆசிரியர்ளால் கூறப்படுகிறது. சில ஆசிரியர்கள் வேறுமாதிரியும் கூறுகின்றனர்.

தேஜ் பகதூர் சீக்கியப் படைகளைக் கொண்டு வடமேற்கு இந்தியாவின் பல்வேறு இடங்களை கைப்பற்ற நினைத்தார். பல கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டார். மேலும் தேஜ்பகதூர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள், ராம்ராய்சிங்கால் சுமத்தப்பட்டன.

அதை நம்பிய ஒளரங்கசீப், கைது செய்யச் சொன்னார். குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தேஜ்பகதூருக்கு நிறைவேற்றப்ப்ட மரண தண்டனையால் சீக்கிய - முகலாய மோதல்கள் அதிகரித்தன.

குரு தேஜ்பகதூரின் மகன் கோவிந்த சிங் பத்தாவது குருவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில் கடுமையான போர்கள் தொடர்ந்தன. சீக்கியர்கள் அதனைப் புனிதப் போராக அறிவித்தனர்.

அளவில் சிறியப்படைகளாக இருந்தாலும், வலிமைப் பொருந்திய சீக்கியர்களை எதிர்கொள்ள முகலாயப் படைகள் திணரத்தான் செய்தன.

சில இடங்களில் முகலாயர்களுக்கு ஆதரவாக ராஜபுத்திரர்களும் போரிட்டனர்.

அனந்த்பூர், சாஹிப் அவர்களால் கைப்பற்றப்பட்டது. குரு கோவிந்தசிங் அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் செல்ல அனுமதிக்கப்ட்டார். ஆனால் அவரது இரண்டு மகன்கள், இன்னொரு போர்களத்தில் முகலாயப்படையினரால் கொல்ல்ப்பட்டனர்.

முகலாயர்களுடன் சமாதனமாகப் போய்விடலாம் என்று முடிவெடுத்த குரு கோவிந்த சிங், ஒளரங்கசீப்புக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்துக்கு அவர் வைத்த பெயர் 'ஜாபர் நாமா (வெற்றியின் பாமாலை)'. அந்தக் கடிதம் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது.

ஒளரங்கசீப்பைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் ஏராளமான வரிகள் அதில் இருந்தன. விரைவில் முகலாயப் பேரரசு ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றும் அதில் இருந்தது. ஒளரங்கசீப், பதிலுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில் தான் குரு கோவிந்த சிங்கைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் சந்திக்க வருவதற்குள் ஒளரங்கசீப் இறந்துப்போனார்.

No comments: