Tuesday, January 20, 2009

4. சூழ்ச்சி

ஷாஜஹான், புதிய மாளிகை ஒன்றைக் கட்டிக்கொள்ள தாராவிற்கு பணம் கொடுத்தார். தாராவும் தன் விருப்பப்படி மாளிகை ஒன்றைக் கட்டி முடித்தார். அதைப் பார்வையிடுவதற்காகத் தன் தந்தையையும், சகோதர, சகோதரிகளையும் அழைத்தார். எல்லோரும் ஒவ்வேர் அறையாகப் பார்த்து ரசித்தனர்.

ஓர் அறை முழுவதும் பெரிய நிலைக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த அறக்குள் எல்லோரையும் அழதைத்தார் தாரா. எல்லோரும் சென்று கண்ணாடி பிம்பங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒளரங்கசீப்அறையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டார்.

அது தாராவுக்கு கோபத்தைத் தூண்டியது, 'ஒளரங்கசீப்பைப் பார்த்தீர்களா? தந்தையே, என்னை அவமரியாதை செய்யும் விதமாக அறைக்கு உள்ளே வராமல், வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறான்.'

ஷாஜஹானுக்கும் அப்போது கோபம் தோன்றியது.

'உன் மதிப்பை நீயே குறைத்துக் கொண்டு, இப்படி அறைக்கு வெளியே தரையில் உட்கார வேண்டிய அவசியம் என்ன? ஒளரங்கசீப்.'

காரணம் இருக்கிறது. இப்போது கூற முடியாது. சமயம் வரும்போது சொல்கிறேன். தொழுகைக்கு நேரமாயிற்று. நான் பிறகு வந்து உங்களை சந்திக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஒளரங்கசீப் விறுவிறுவென வெளியே சென்றுவிட்டார்.

'பார்த்தீர்களா தந்தையே, உங்களையும் அவமானப்படுத்திவிட்டான் அவன்' என்று தாரா ஷாஜஹானின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டார்.

'இனி தர்பாருக்கு ஒளரங்கசீப் வரக்கூடாது என்று அவனிடம் கூறிவிடுங்கள்' என்று கட்டளையிட்டார் ஷாஜஹான்.

விஷயத்தை கேள்விபட்ட ஒளரங்கசீப்புக்கு ஏகப்பட்ட வருத்தம். தந்தை மீது, முக்கியமாக தாரா மீது எக்கச்சக்கமான கோபம். அடுத்த ஏழு மாதங்களுக்கு அரசவை நடக்கும் தர்பாருக்கே போகவில்லை. தான் அன்று அறைக்கு வெளியே உட்கார்ந்திருந்த காரணத்தை, ஒரு நாள் தன் பாசத்திற்குறிய சகோதரி ரோஷனாராவிடம் போட்டுடைத்தார் ஒளரங்கசீப்.

'அன்று தாரா அந்த அறைக்கு நம் எல்லோரையும் அழைத்துச் சென்றான். அந்த அறைக்குள் நுழையவும், வெளியே வரவும் இருந்தது ஒரே வாசல்தான். அது எனக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. மேலும் தாரா, உள்ளே செல்வதும்,அறைக்கு வெளியே வந்து வேவு பார்ப்பதுமாகச் சந்தேகம் தரும்படி உலவிக் கொண்டிருந்தான். நம் தந்தை உட்பட எல்லோரையும் அந்த அறைக்குள் வரவழைத்து, அடைத்து, பின் கொல்வதே அவன் திட்டம் என்பது என் சந்தேகம். அதனால் தான் எல்லோரையும் தாராவின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் விதமாக வெளியே ஒரு காவல் காரனாக உட்கார்ந்து கொண்டேன். தந்தை அதைத் தவறாகப் புரிந்துக்கொண்டு என்னை அவமானப்படுத்திவிட்டார்.

ரோஷனாரா மூலமாக ஷாஜஹானின் காதுகளுக்கு இந்த விஷயம் போனது. ஆனால் அவர் ஒளரங்கசீப்பை நம்பினாரோ இல்லையோ, தாராவின் மீதான தன பாசத்தை கொஞ்சம் கூடக் குறைத்துக்கொள்ளவில்லை. ஒளரங்கசீப்பின் மீது தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டார். குஜராத்தின் கவர்னர் பதவியை ஒளரங்கசீப்புக்குக் கொடுத்தார் (1645).

அங்கும் அவரது திறமையான நிர்வாகம் வெளிபட்டது. அதே நேரத்தில் பால்க் (Balk ), பாடக்ஷான் (Badakshan) பகுதிகள் முகலாயர்கள் கையைவிட்டுப் போகும் நிலையில் இருந்தன. அந்தப் பகுதிகளின் கவர்னராக இருந்த ஷாஸஹானின் நான்காவது மகன் முராட்டின் திறமையின்மை தான் அதற்குக் காரணம். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் முராட் திணறிக் கொண்டிருந்தார்.

ஷாஜஹான், முராட்டை பதவியிலிருந்து நீக்கினார். ஒளரங்கசீப்பைப் பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார். ஒளரங்கசீப்பின் படைகள் எதிரிகளைத் துவம்சம் செய்தன. மீண்டும் அந்தப் பகுதிகள் முகலாயர்களின் வசமாயின.

'காந்தஹாரைக் கைப்பற்று' - ஷாஜஹான் ஒளரங்கசீப்புக்குப் போட்ட அடுத்த உத்தரவு இதுதான்.

முதன் முதலில் பாபர் காந்தஹாரைக் கைப்பற்றினார். அதற்கு பின் முகலாய மன்னர்கள் ஒவ்வொருவரும் காந்தஹாரை ஏதாவது ஒரு வகையில் தம் வசமாக்கிக் கொணடனர். காந்தஹார் முகலாயர்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே கைமாறிக் கொண்டே இருந்த பகுதி.

1638-ல் ஷாஜஹான், பாரசீக கவர்னர் மாதார்கானிடம் ஏராளமான பணத்தைக் கொடுத்து ஆட்சி, அதிகாரத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் இரண்டாம் ஷா அப்பாஸ் என்பவர், படைதிரட்டி கொண்டு வந்து முகலாயர்களுடன் போரிட்டார். நாற்பது நாள்களுக்கும் மேலும் நீடித்த போரின் இறுதியில், காந்தஹார் மீண்டும் பாரசீகர்களின் வசமானது (1649, பிப்ரவரி).

படைகளோடு கிளம்பினார் ஒளரங்கசீப் (1649, மே) முகலாயப் படைகளோடு ஒப்பிடுகையில் பாரசீகப்படைகள் மிகவும் வலிமையாக இருந்தன. அவர்களிடம் புதிய ஆயுதங்களும், போர்க்கருவிகளும் இருந்தன. குறிப்பாக, பீரங்கிகள். முகலாயப் படையினரின் எண்ணிக்கையும் குறைவு. சொல்லிக் கொள்ளும்படியான போர்க் கருவிகள் எல்லாம் இல்லை. பீரங்கிகள் கூட மிகவும் பழசு. வலிமை குன்றியவை.

அப்போது முகலாயர்களின் ஒரே பலமாக இருந்தவர் சிறந்த படைத்தளபதியாக விளங்கிய சாதுல்லாஹ்கான் (Sadullahkhan). அவருக்கு அடுத்த இடத்தில்தான் ஒளரங்கசீப் இருந்தார். இந்நிலையில் ஷாஜஹான், 'இங்கே முற்றுகையிட வேண்டும், அப்படித் தாக்க வேண்டும், இப்படி போரிட வேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் வகுத்து ஆக்ராவிலிருந்தபடியே கடிதங்கள் அனுப்பிக்கொண்டு இருந்தார்.

இருக்கின்ற படைபலத்தைக் கொண்டு ஷாஜஹானின் உத்தரவுப்படியெல்லாம் செயல்பட முடியாது என்று ஒளரங்கசீப்புக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மற்ற இரு தளபதிகளும் ஷாஜஹானின் உத்தரவுப்படியே செயல்பட்டனர். முகலாயப்படையினருக்குப் பலத்த அடியே கிடைத்தது.

ஷாஜஹான், தன் படைகளைத் திரும்ப வரச் சொல்ல செய்தியனுப்பினார். ஆனால் ஒளரங்கசீப்பின் திறமையில்லாதத் தாக்குதலினால் தான், இப்படி பின்வாங்க வேண்டியிருந்தது என்று ஷாஜஹான் குற்றம் சாட்டினார். மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு ஒளரங்கசீப் பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

ஷாஜஹானும் வாய்ப்பு வழங்கினார். ஆனால் ஒளரங்கசீப்புக்கு அல்ல, தாராவுக்கு. தான் தாராவோடு சோர்ந்து போருக்கு போகிறேன் என்று ஒளரங்கசீப் வேண்டுகோள் வைத்தார். அதனை உதாசீனப்படுத்தினார் ஷாஜஹான்.

தாராவின் தலைமையில் சென்றது பலம் வாய்ந்த முகலாயப் படை. புதிய போர்க்கருவிகளும் இடம் பெற்றிருந்தன.காந்தஹார் முற்றுகை தொடங்கியது. ஐந்து மாதங்களாக நீடித்தது. இறுதியல் கிடைத்தது தோல்வியே.

தாரவின் தோல்வி ஷாஜஹானைப் பாதிக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒளரங்கசீப்பை தக்காணத்தின் கவர்னராக நியமித்தார். அவரது ச்பளம் குறைக்கப்பட்டது. அப்போது தக்காணத்தில் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒளரங்கசீப்புக்குப் பின் அங்கு நிர்வாகத்தில் இருந்தவர்களால் ஊழலும் சீர்கேடுகளும் மலிந்திருந்தன. பொருளாதார நிலை மிகவும் மோசமாகிப் போயிருந்தது.

ஒளரங்கசீப் நிர்வாக முறைகள் அனைத்தையும் மாற்றியமைத்தார். கொருளாதார நிலையைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தினால், சில வளமான பகுதிகளைத் தன் அதிகாரத்தின் கீழ் கொடுக்கும் படி ஷாஜஹானிடம் கோரிக்கை வைத்தார். தயவுதாட்சண்யமின்றி கோரிக்கைகள் நிராகரிக்ப்பட்டன. அவ்வளவு நாள்கள் ஒளரங்கசீப்பிடம் பணியாற்றி வந்த திறமையான அதிகாரிகள் பலர், ஷாஜஹானால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தக்காணத்தின் கவர்னராக ஒளரங்கசீப் இருந்தாரே ஒழிய, செயல்படுத்தப்பட் வேண்டிய உத்தரவுகள் எல்லாம் பேரரசர் ஷாஜஹானிடம் இருந்துதான் வந்தன. தன்னிடம் அதிகாரம் இருந்தால் தான், பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்ற ஒளரங்கசீப்பின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
இப்படி ஷாஜஹானுக்கும் ஒளரங்கசீப்புக்கும் இடையே பனிப்போர் நீண்டு கொண்டே போனது. ஷாஜஹானின் வெறுப்பு ஒளரங்கசீப்பிடம் மட்டுமின்றி, அவரது பிள்ளைகளிடமும் தொடர்ந்தன. தாராவின் பிள்ளைகள் மீது பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தார்.

No comments: